சென்னை: லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் விஜய் கூட்டணி மீண்டும் லியோ படத்தில் இணைந்தது எதிர்பார்ப்பை அதிகரித்தது. லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ளார்.
ஆடியோ வெளியீட்டு விழா ரத்து, டிரெய்லரில் ஆபாச வார்ததை பயன்படுத்தியது, முதல் காட்சி பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளை கடந்து லியோ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியானது. லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. ரிலீசான ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.148 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வசூல் கணக்கை வெளியிட்டது. லியோ திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று படம் வெளியாகி ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் முதல் வார வசூலில் ஜெயிலர் திரைப்படத்தை கடந்து லியோ திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் வெளியான 7 நாட்களில் ரூ.375 கோடி வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியான 7 நாட்களில் ரூ 461 கோடி வசூல் செய்து ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய அறிவிப்பு வெளியாகாததால் லியோ திரைப்படம் மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காதலுக்கு தலையசைத்த அமலா பால்.. வைரலாகும் 'லிப் லாக்' வீடியோ!