தமிழக வரலாற்றில் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாது. இரண்டுமே ஒன்றுடன் ஒன்று கலந்தவைதான். இந்த சினிமாதான் தமிழகத்திற்கு ஐந்து முதலமைச்சர்களை கொடுத்தது.
இது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். அந்த அளவிற்கு தமிழக மக்கள் சினிமா மீதும் சினிமாக்காரர்கள் மீதும் அன்பும் பாசமும் வைத்துள்ளனர்.
அதனால்தான் தற்போது உள்ள நடிகர்கள் நாற்காலி கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் வலம்வருகின்றனர். அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜானகி ராமச்சந்திரன், கருணாநிதி, ஜெயலலிதா என முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அனைவருமே சினிமாக்காரர்கள்தான்.
இவர்களைப் பார்த்து தாமும் எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என்று ஆசையில் அரசியலில் ஈடுபட தொடங்கினர் தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த நடிகர்கள். இப்போதுதான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் வேண்டாம் என்று விலகிவிட்டார். ஆனால் அப்போதே விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், ராமராஜன், சரத்குமார் உள்ளிட்டோர் அரசியலில் ஈடுபட தொடங்கினர். ஆனால் காலம்செல்ல செல்ல இவர்களால் அரசியலில் ஜொலிக்க முடியாமல் போயினர்.
இதனால் மீண்டும் தனது தாய் வீடான சினிமா பக்கம் தங்களது பாதையை திருப்பினர். 2005இல் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக்கழகத்தை தொடங்கிய விஜயகாந்த் தனது ஜனரஞ்சகமான கொள்கைப்பேச்சு மற்றும் தீவிரமான கட்சிப்பணிகளால் அடுத்த ஆண்டு தேர்தலில் 10% வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தார்.
ஆனால் அடுத்தடுத்து எடுத்த தவறான முடிவுகளால் அவரது கட்சி பாதாளத்தில் வீழ்ந்தது. மேலும் விஜயகாந்த்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் அவரது கட்சியை பலவீனமாக்கியது. இதனால் தற்போது நானும் இருக்கிறேன் என்ற நிலையில் கட்சி உள்ளது.
நடிகர்கள் அரசியலில் எப்படி இருந்தால் வெற்றி எப்படி இருந்தால் தோல்வி என்பதற்கு விஜயகாந்த் உதாரணம். சரத்குமார் 2007இல் தனது சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். ஆனால் எதிர்பார்த்ததுபோல் வெற்றியில்லை. திமுக மற்றும் அதிமுகவை நம்பியே தற்போது வரை தேர்தலை சந்துத்து வருகிறார். இதனால் தற்போது தீவிரமாக சினிமாவில் நடித்துவருகிறார்.
பாக்யராஜ் தொடங்கிய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்னவானது என்று அவருக்கே தெரியாது. சினிமாவில் மக்கள் விரும்பும் நடிகராகவோ இயக்குனராகவோ இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு என்பதை அவர் உணர்ந்துவிட்டார். தனது கட்சியை திமுகவில் இணைத்துவிட்டு தற்போது தனக்கு வரும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.
தமிழ் சினிமாவின் அஷ்டவாதானியான டி.ராஜேந்தர். திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர் திமுகவில் இருந்து பிரிந்து அனைத்திந்திய லட்சிய திமுகவை தொடங்கினார். ஆனால் அப்படி ஒரு கட்சி தொடங்கியது அவரை தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை.
விளைவு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு அவ்வப்போது திரைத்துறை தொடர்பாக தனது சங்கத்துடன் சேர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் கார்த்திக் 2009இல் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கியதோடு சரி அவ்வப்போது தேர்தல் சமயங்களில் மட்டும் அவரிடம் இருந்து அறிக்கை வரும். இவரும் இப்போது படங்களில் நடித்து வருகிறார். அதிமுக, திமுகவை ஆகிய இருபெரும் கட்சிகளை மீறி தங்களது கட்சியை வளர்க்க மிகப்பெரிய உழைப்பை கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை நடிகர்கள் அறிந்திருக்கவில்லை.
அவ்வளவு ஏன் சிவாஜியே கட்சிதொடங்கி கல்லடிபட்டவர்தானே. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிவாஜி, எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜானகி அணியில் இணைந்தார். ஆனால் தேர்தலில் ஜெயலலிதா அணி வெற்றிபெற்றது. பின்பு தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி என்ற கட்சியை தொடங்கிய சிவாஜி அதே ஆண்டு கலைத்துவிட்டு கலைத்துறைதான் எனது சொத்து என மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்டார்.
மன்சூர் அலிகான் 2009இல் பேரரசு என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில்கூட போட்டியிட்டு தோல்வியுற்றார். தற்போது தனது நடிப்பு பணியை தொடர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவரானார்.
பின்னர் அதிமுக கூட்டணியில் இணைந்து 2011 தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். தற்போது அரசியல் வேண்டாம் என்று மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் ஒருபடிபோய் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகவும் சேர்ந்துவிட்டார் என்பது தனிக்கதை.
அதேபோன்று நடிகை குஷ்பூ திமுக, காங்கிரஸ், பாஜக என ரவுண்டு கட்டி அடித்துவருபவர். அண்ணாத்த படத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியுள்ளார். இதனால் அரசியலுக்கு சிறிது காலம் ஓய்வு அளித்துள்ளார் என்கிறார்கள். கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி நடத்தி வந்தாலும் தற்போது நடித்துள்ள விக்ரம் படத்தின் புரொமோஷனுக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
மேலும் அவரது கைவசம் உள்ள படங்களின் பட்டியலும் சற்று அதிகரித்துள்ளதால் அவரது கவனம் சிறிது காலம் சினிமா மீதுதான் அதிகம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இனி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஆண்டுகள் பல இருப்பதால் அரசியலில் ஈடுபட்டுவந்த நடிகர்கள் மீண்டும் தங்களது தாய்வீடு திரும்பியுள்ளனர். முக்கியத்துவமும் இனி நடிப்புக்குத்தான் இருக்கும் என தெரிகிறது. பார்ப்போம்..!
இதையும் படிங்க: 'இவளின் இருத்தலே மாபெரும் அழகியல்..!' : நேஹா சர்மா புகைப்படத் தொகுப்பு