இயக்குநர் முத்தையா மண்வாசனையுடைய படங்களை இயக்குவதின் மூலம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்தவர். இவரது குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் உள்ளிட்ட படங்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. இவர் கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை கடைசியாக இயக்கினார். இப்படமும் இதற்கு முன் கார்த்தியுடன் இணைந்த கொம்பன் படத்தை போல மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தற்போது ஆர்யாவை தனது கதையின்நாயகனாக்கி உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா முதல் முறையாக கிராமத்துப் பின்னணியில் நடித்துள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். ஆர்யாவையும் தனது படங்களில் வரும் கதாநாயகன் போல கருப்பு வேட்டிகட்டிவிட்டுள்ளார், இயக்குநர் முத்தையா.
இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார், ஆர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார். படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
![‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-arya-movie-release-script-7205221_13052023203036_1305f_1683990036_831.jpg)
இந்நிலையில், 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் உலகமெங்கும் இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முதல்முறையாக ஆர்யாவின் இந்த கிராமத்து தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இயக்குநர் முத்தையா எப்போதுமே சாதிய படங்களை எடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. படத்தின் தலைப்பும் பிரச்னையை உண்டுபண்ணுவது போல் உள்ளதால் படம் வெளியாகும் போது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்