சென்னை: இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ள பிகினிங் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லிங்குசாமி, “முதல் படம் நான் இயக்கும்போது என்ன மனநிலை இருந்ததோ, அதே மனநிலையை இப்போது நான் பார்க்கிறேன்.
உங்களுடைய (இயக்குநர் ஜெகன் விஜயா) எழுத்து அற்புதமாக உள்ளது. அவ்வளவு சீக்கிரம் சினிமாவை விட்டு போய்விட மாட்டீர்கள். இந்த படத்திற்கு பிறகு திருப்பதி பிரதர்ஸ் மஞ்சப்பை, கோலிசோடா, வழக்கு என் 18/9 போன்ற நல்ல படங்களை தயாரிக்க உள்ளது.
பொருளாதார ரீதியாக உத்தம வில்லன் பெரிய பின்னடைவுதான். சமீபத்தில் கமலை சந்தித்து பேசினேன். அப்போது அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல் ஹாசன் மீண்டும் ஒரு படம் செய்வதாக உறுதி அளித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என நம்புகிறோம்” என்றார்.
இதனையடுத்து பேசிய இயக்குனர் ஜெகன், “நான் ஹலோ ஹலோ என்ற வார்த்தையில் இருந்து தொடங்குகிறேன். காரணம் எனது அப்பா சவுண்ட் சர்விஸ் வைத்திருந்தார். சிறு வயதில் இருந்து அந்த மைக்கில் பேச ஆசைப்பட்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. இப்போது இந்த மைக் முன்பு நான் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.
2006 முதல் நான் உதவி இயக்குனராக சென்னையில் ஏறி இறங்காத அலுவலகம் இல்லை. அப்படியும் பெயர் சொல்லும் அளவிற்கு படங்களில் நான் பணியாற்றவில்லை. கடைசியாக 2012ஆம் ஆண்டு ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அநேக அலுவலகங்களில் என்னை அன்பிட் என்றே முடிவு செய்தனர்.
நானே என் எழுத்தை நம்பினேன். படத்தை பார்த்தே கற்றுக்கொண்டேன். என் நிலத்தை விற்று அம்மாவிடம் கதையை கொடுத்துதான் இந்த படத்தை ஆரம்பித்தோம். நான் சினிமாவை நம்பினேன். அது என்னை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும் என நம்பினேன். தற்போது அது சாத்தியமாகி உள்ளது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் வினோத் கிஷன், “ஒரு நடிகரா ஒரு முக்கியமான படமாக இந்த படத்தை பார்க்கிறேன். இப்படி ஒரு கதாபத்திரம் எனக்கு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தை வெளியிடுவது சர்ப்ரைஸ் ஆக இருந்தது.
இயக்குனர் ஜெகன் கதையை எழுதும்போதே அனைத்தையும் தயாராக வைத்திருந்தார். படத்தை ஆரம்பிக்கும்போது எப்படி இதை திரையில் கொண்டு வர போகிறோம் என எண்ணினினோம். 100% நம்பிக்கையை இயக்குனர் ஜெகன் வைத்திருந்தார்” என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய நடிகை கௌரி, “குட்டி ஜானு என்ற பெயர் பிகினிங் படத்திற்கு பிறகு மாறும் என நினைக்கிறேன். இந்த படத்தின் அனைத்து கதாபாத்திரத்திலும் இயக்குனரின் டச் இருக்கும். அருமையான இயக்குனர். இந்த படத்தில் இரண்டு பெண் கதாபாத்திரம்தான்.
அந்த கதாபாத்திரத்திற்கு எங்களோடு கலந்து ஆலோசித்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. விருதுக்காக நாங்கள் படம் செய்யவில்லை. இது ஒரு அருமையான புது முயற்சி. திரையில் பார்க்கையில் நல்ல ஒரு அனுபவமாக கண்டிப்பாக இருக்கும்” என பேசினார்.
இதையும் படிங்க: தமாகா படத்தின் நடிகை ஸ்ரீலீலாவின் அழகிய புகைப்பட தொகுப்பு