சென்னை: நடன இயக்குனர் பிருந்தா தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவர் ஹே சினாமிகா என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தக்ஸ் என்ற பெயரில் ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இந்த தக்ஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (பிப். 18) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பிருந்தா, ரிது ஹரோன், முனீஷ்காந்த், தயாரிப்பாளர் தேனப்பன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தக்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ”ஒரு கதை கேட்கும் போது நிறைய படங்கள் ஆச்சரியப்படுத்தும். ஆனால் படமாக பார்க்கும் போது என்னை ஏமாற்றிவிடும்.
ஆனால், இந்த படத்தின் கதையை நான் கேட்டது போலவே பிருந்தா மாஸ்டர் படமாக்கியுள்ளார். மணிரத்னம் பாடல்களை கேட்டு தான் நான் மியூசிக் கம்போஸ் பண்ணுவேன். இப்படம் எமோஷனலாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக இருக்கிறது. நான் தூங்கி ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. ஒருநாளைக்கு நான்கு மணி நேரம்தான் தூங்குகிறேன். எந்த பார்ட்டிக்கும் செல்வதில்லை. நான் இசையமைப்பதில் சிறிய படம், பெரிய படம் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை.
அனைத்து படங்களையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன். இந்த படத்தின் இசையில் குறைகள் இருந்தால் மன்னிக்கவும். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்” என கூறினார் படத்தின் இயக்குனர் பிருந்தா பேசுகையில், ”முதலில் ரிதுவை பார்க்கும்போது பயந்தேன். பின்னர் அவரது நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். ரஜினியிடம் உள்ள பவர் ரிதுவின் கண்களில் தெரிந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. கைதி திரைப்படத்தின் இசையை போட்டுத்தான் படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை எடுப்பேன். பாடல்களுக்கும் பின்னணி இசைக்கு சாம் சிஎஸ்க்கு மிக்க நன்றி” என்றார்
இதையும் படிங்க: ஒரே பாடலில் 500 நடன கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த மாவீரன் படக்குழுவுக்கு பாராட்டு