சென்னை: இந்த ஆண்டின் இறுதிக் கொண்டாட்டங்களை இனிமையாக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அதிரடி டிராமா திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்தை ஸ்டீரிம் செய்துள்ளது.
நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தங்கள் வீட்டின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காகச் சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும், ஒரு இறுக்கமான, மிக யதார்த்தமான கதையைச் சொல்கிறது. இயல்பான கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
ஒரு அழுத்தமான கதையைப் பொழுதுபோக்கு வகையில் அழகாகச் சொல்லியுள்ள இந்தப் படம், பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் நிச்சயம் சந்தித்திருக்கும் இதே போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில், மிக அற்புதமான படைப்பாக அமைந்துள்ளது.
இம்மாதம் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மிக்ஜாம் புயலால் இதன் வசூல் பாதிக்கப்பட்டாலும் நல்ல படம் என்ற பெயரைப் பெற்றது. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு மிகவும் பாராட்டுகளைப் பெற்றது. இரண்டு மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோ பற்றிய படமாக இது கவனம் ஈர்த்தது. இந்த ஆண்டு வெளியான நல்ல படங்களின் பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றது.
பார்க்கிங் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜி.ஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பிலோமின் ராஜ் செய்துள்ளார் மற்றும் கலை இயக்கத்தினை N.K.ராகுல் செய்துள்ளார். இந்நிலையில் இப்படம், இன்று (டிச.30) டிஸ்னி+ ஹாஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஓடிடியிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாமிரபரணி நீர் வரத்து அதிகரிப்பு-நெல்லை மலைகளில் மீண்டும் தொடர் மழை