சென்னை: இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தேசிய விருது பெற்ற இப்படம், இன்று வரை தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக உள்ளது. இப்படம் உருவாக்கத்தின்போது இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், இப்படத்தின் பட்ஜெட் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீரை திருடன் என்று ஒருமையில் பேசியது திரைத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக பருத்திவீரன் படத்தில் பணியாற்றிய சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் இயக்குநர் பாரதிராஜா, கரு.பழனியப்பன், சுதா கொங்காரா, சினேகன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக நின்றனர்.
இந்த விஷயம் பெரிதான நிலையில் ஞானவேல் ராஜாவும், சூர்யா, கார்த்தி தரப்பும் அமைதி காத்தனர். இதனால் இப்பிரச்னை முடிவுக்கு வர ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலதரப்பினரும் கூறி வந்தனர். கடைசி வரை மௌனம் காத்து வந்த ஞானவேல் ராஜா, தற்போது இந்த விஷயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பருத்தி வீரன் பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை.
என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில், என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள், என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை வாழ வைக்கும் சினிமாத் துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: “விரைவில் படம் வெளியாகும்”- துருவ நட்சத்திரம் வெளியீடு குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் உருக்கம்!