சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஊழல், லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இந்தியன்'. இந்த படத்தில் சேனாதிபதி மற்றும் சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் கலக்கியிருப்பார். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து 2019-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே பல தடங்கல்களை சந்தித்து வந்தது. கரோனா தொற்று, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து தொழில்நுட்ப கலைஞர் உயிரிழப்பு என பலமுறை படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ளிம்ப்ஸ் வீடியோவில் காட்டப்பட்ட கமலின் இந்தியன் தாத்தா தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை (glimpse video) அவரது நண்பரான நடிகர் ரஜினிகாந்த் தனது X சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தார்.
மேலும், அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில், சமீபத்தில் மறைந்த நடிகர்கள் இடம் பெற்றுள்ளதை கண்ட ரசிகர்கள் அவர்களை நினைவு கூர்ந்து, இது தான் அவர்களது கடைசி படம் என வருத்தத்தோடு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர்கள் நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா, மாரிமுத்து ஆகியோர் வந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் நினைவு கூர்ந்தனர்.
நெடுமுடி வேணு: இவர் இந்தியன் படத்திலேயே தனது அபார நடிப்பால் தனி முத்திரை பதித்தவர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் அந்நியன், சர்வம் தாள மயம், நவராசா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காலமானார்.
சின்னக் கலைவாணர்: தமிழ் திரையுலகின் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக். எத்தனையோ படங்களில் தன்னுடைய புரட்சிகரமான நகைச்சுவைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவர் மாரடைப்பு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு காலமானார். முன்னதாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தில் இவரது நடித்திருந்தார்.
அப்படம் நடிகர் விவேக் மறைவுக்கு பிறகு வெளியானது. தற்போது இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்துள்ளார். விவேக் நடித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படாது என்ற இயக்குநர் ஷங்கரின் அறிவிப்பின் படி நேற்று வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவிலும் விவேக் நடித்திருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
மனோபாலா: மேலும், இயக்குநரும், நடிகருமான மனோபாலா கடந்த மே மாதம் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு, இவர் நடித்த எத்தனையோ படங்கள் வெளியாகியுள்ளன. இனியும் பல படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.
மாரிமுத்து: சின்னத்திரை கதாப்பாத்திரம் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து, கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் சின்னத்திரை நாடகத்தில் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சில நட்சத்திர நடிகர்களின் கடைசி படமாக இந்தியன் 2 அமைந்துள்ளதாக ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “இவனுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்லை” - மிஷ்கினை புகழ்ந்த பாலா!