இந்த ஆண்டு இந்திய சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக இந்தியாவில் ஓடிடியின் வளர்ச்சி, சினிமா மீதான பார்வையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே கூறலாம். அந்த வகையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, ’பான் இந்தியன் சினிமா(PAN INDIAN CINEMA)'. ஒரு குறிப்பிட்ட மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளுக்கு டப் செய்யப்பட்டு பான் இந்தியன் படமாக வெளியிடப்படும்.
பான் இந்தியன்: அதன் படி பான் இந்தியன் சினிமா என்பது மக்களுக்கு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி முதலே இது தொடங்கியது என்றாலும், கன்னட திரைப்படமான ’கேஜிஎஃப்’ படம் மூலம் கடந்த ஆண்டு இந்த பான் இந்தியன் சினிமா வெகுஜனத்தின் மத்தியில் பெரிதாகக் கவனிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 , புஷ்பா, ஆர் ஆர் ஆர், என பல படங்கள் வரிசையாக பான் இந்தியன் படமாக வெளியாகத் தொடங்கின.
இப்படி பல படங்கள் ஒரு மொழியில் எடுக்கப்பட்டு, பல மொழிகளில் வெளியாகிக்கொண்டிருக்க, பெரும்பாலான நடிகர்களும் இதுபோன்ற படங்களில் நடிக்க விரும்பினர். ஆனால் ஒரு நடிகர் மட்டும், ஒரு மொழியில் எடுக்கப்படும் திரைப்படம் அந்த பகுதியின் உணர்வுகளையும், கலாச்சாரத்தையும் கொண்டு இருக்கும் அப்படம், அதனை வெவ்வேறு மொழிகளில் வெளியிடும் போது அவற்றை இழந்துவிடக் கூடாது என நினைக்கிறேன் என்றார் நடிகர் துல்கர் சல்மான்.
இப்படி கூறிய அவர், ஒரு குறிப்பிட்ட மொழியில் எடுக்கப்பட்டுப் பல படங்கள் பான் இந்தியன் படமாக வெளியாகி வரும் இந்த காலகட்டத்தில், மலையாள நடிகரான துல்கர் சல்மான் அந்தந்த மொழிகளுக்கே சென்று நடிக்க தொடங்கினார். அப்படியாகத் தமிழில் நடன இயக்குநர் பிரிந்தா முதலில் இயக்குநராக அறிமுகம் ஆன ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இந்த வருடத்தைத் தொடங்கிய துல்கர் சல்மான் ஹிந்தியில் இயக்குநர் பால்கி இயக்கிய ’சுப்’ பட என நான்கு மொழிகளுக்கு நான்கு படம் என இந்த வருடத்தை முடித்துள்ளார்.
நான்கு மொழிகளில் நான்கு படம்: ஆனால் முதல் படமாக தமிழில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் வெளியான 'ஹே சினாமிகா’ திரைப்படம், எதிர்பார்க்கப்பட்ட அளவில் ஓடவில்லை என்று தான் கூற வேண்டும். வசூலிலும் சரி ரசிகர்களின் மத்தியிலும் சரி இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பின்னர் அவர் மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கத்தில் துல்கர் நடித்த ’சல்யூட்’ எனும் திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவில் வெளியானது. மேலும் கிட்டத் தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின்னர் துல்கர் போலீசாக நடித்திருந்தார். க்ரைம் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், திரை விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவானது 'சீதா ராமம்’. திரையரங்குகளில் வெளியான இந்த படத்தின் வெற்றி நாம் அனைவரும் அறிந்ததே, தெலுங்கு படமாக உருவானாலும் இந்த திரைப்படம் ’பான் இந்தியன்’ படமாக வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் குவித்தது. சாதாரண காதல் கதையுடன் ஒரு பீரியட் ரொமான்ஸ் படமாக வெளியான இந்த படத்தின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதும், தயாரிப்பாளருக்குமே இதனை எதிர்பாராத ஒன்றாக இருந்தது, என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இப்படி ஒரு பெரும் வெற்றியைத் தொடர்ந்து ஹிந்தியில் இயக்குநர் பால்கி இயக்கத்தில் உருவான ’சுப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் கில்லராக துல்கர் நடித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், நல்ல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படி நான்கு மொழிகளில் நான்கு விதமான கதைக்களம் கொண்ட படங்களைக் கொடுத்து அசத்தினார் துல்கர்.
தயாரிப்பாளராகவும் வெற்றி: இதுபோன்று வெவேறு மொழிகளில் துல்கர் நடிப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக மலையாளம் தவிர்த்து தமிழில் ’வாயை மூடி பேசவும்’, 'சோலோ’, ’ஓ காதல் கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ போன்ற படங்களிலும், தெலுங்கில் 'மகாநதி’ திரைப்படத்திலும், ஹிந்தியில் ’கார்வான்’ எனும் படத்திலும் நடித்துள்ளார். இருப்பினும் தமிழை தவிர்த்து மற்ற மொழிகளில், இதுவரை கதாநாயகனாக நடிக்காத குறையினை தற்போது நீக்கியுள்ளார் துல்கர் சல்மான். மேலும் அடுத்ததாக ஹிந்தியில் ’கன்ஸ் & குலாப்ஸ்’ எனும் நெட்பிலிக்ஸ் தொடரிலும், மலையாளத்தில் ’கிங் ஆஃப் கோதா’ எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த வருடத்தில் படங்களில் நடித்தது மட்டுமின்றி உபசார பூர்வம் குண்ட ஜெயன், பியாலி மற்றும் மம்மூட்டி நடித்த ரோர்சாக், புழு ஆகிய மலையாள படங்களைத் தனது Wayfarer Films தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளார். இப்படி ஒரே ஆண்டில் வெற்றிகரமாக நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று, ’தந்தையால் தான் வளர்ந்தார்’ என எழும் விமர்சனங்களை உடைத்தெறிந்துள்ளார்.
பான் இந்தியா எனும் வார்த்தை பரிட்சியம் ஆகாத பல ஆண்டுகளுக்கு முன்னரே, கமல்ஹாசன் எனும் நடிகர் இந்தியாவின் பல மொழிப்பாடங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வந்தாலும், தற்போது வரை திரைப்படத்திற்கான கதைகளை நேர்த்தியாகத் தேர்வு செய்து தனது திறமையின் மூலமாக, இந்தியா முழுவதும் தனது நடிப்பிற்கென ரசிகர் கூட்டத்தை வளரத்து வரும் துல்கர் சல்மான், இந்த வருடத்தின் ’பான் இந்தியன் ஸ்டாராக’ உருவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்கார் பெறுமா RRR திரைப்படம்? சாத்தியக்கூறுகள் ஒரு பார்வை!