சென்னை: பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி-2 செப்.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (செப்.03) சென்னையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், பி.வாசு, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கங்கனா ரனாவத், “இது எனது மிகப் பெரிய படம். டான்ஸ், காமெடி, வரலாறு எல்லாமே இப்படத்தில் இருக்கும். லாரன்ஸ் படத்தில் மிகவும் சிறப்பாக இருக்கிறார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனுக்கு நான்தான் டப்பிங் செய்தேன். கத்தி கத்தி எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. தமிழ்நாட்டு உணவில் எனக்கு ரசம் ரொம்ப பிடிக்கும். அப்புறம் காஞ்சிபுரம் பட்டு பிடிக்கும்” என்று பேசினார்.
தொடர்ந்து இயக்குநர் பி.வாசு பேசும்போது, “சூப்பர் ஸ்டார் உடன் யாரையும் ஒப்பீடு செய்ய வேண்டாம். சூப்பர் ஸ்டார் பற்றி பேசுவதோ கேட்பதோ இனி தேவையில்லாதது என்று நினைக்கிறேன்” என்றார். பின்னர், நடிகர் லாரன்ஸ் பேசும்போது, “எனது அண்ணன், எனது குரு, எனது வழிகாட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி.
இந்த படம் இவ்வளவு நாள்கள் ஓடியது என்றால் ரஜினி, சிவாஜி புரொடக்சன்ஸ், பி.வாசு அனைவருக்கும் நன்றி. அவர்கள் இல்லை என்றால் இப்படம் சாத்தியம் இல்லை. கூல் சுரேஷ் என்மீது உள்ள அன்பால் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் கேட்டாரா இல்லை. நான் எப்போதும் விஜய்யை பார்த்தாலும் ரஜினி எப்படி இருக்கிறார் என்று கேட்பார்.
இருவருக்குள்ளும் எந்த பிரச்னையும் இல்லை. இங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். அதனை பிரிக்க வேண்டாம். லைக்காவில் படம் நடிப்பது எனக்கும் பெருமையாக உள்ளது. இப்படத்தில் நடிக்கும் போது ரஜினியை எனது உடம்பில் இருந்து எடுப்பது தான் இயக்குநருக்கு மிகப் பெரிய பிரச்னை. வசனம் பேசும் போதும் நடக்கும் போதும் ரஜினி போலவே இருக்கும்” என்றார். இறுதியாக ராகவா லாரன்ஸ், நடிகைகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: Raghava Lawrence: ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கிய ராகவா லாரன்ஸ்!