சென்னை: கே.வி.நந்தா இயக்கத்தில் விமல் நடித்துள்ள படவா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விமல், பேரரசு, தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினரான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், 1000 விளம்பரங்களுக்கு இசையமைத்த ஜான் பீட்டர், இந்த படத்துக்கு இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிறிய படங்களுக்கு ஆதரவு தந்து திரையரங்கில் படம் பாருங்கள்” என்றார். விஜய் ஆண்டனி பேசி முடித்த பின் படவா படத்தின் பாடலுக்கு மெட்டு போட்டு 2 வரிகள் பாடி அனைவரையும் உற்சாகமூட்டினார்.
சிறப்பு விருந்தினரான இயக்குநர் பேரரசு மேடையில் பேசுகையில், “ஒரு இசையமைப்பாளர் படம் தயாரித்துள்ளார். அதனால் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வந்திருக்கிறார். அவரை படத்தில் விட நிஜத்தில் மிக பிடிக்கும். அவர் கதை தேர்ந்தெடுப்பதில் கில்லாடி, பிச்சைக்காரன் என தலைப்பு வைக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்.
கதை மேல் உள்ள நம்பிக்கையில் எதுவும் கேட்கவில்லை. விஜய் ஆண்டனியிடம் அருள் வாக்கு இருக்கிறது என்றவர் பழைய 100, 500 நோட்டுகள் ஒழிக்க வேண்டும் என்று படத்தில் கூறிய படி நடந்து விட்டது. மேலும் படத்தின் நாயகி செக்ஸியாக தான் இருக்கிறார். அதனால் தான் செக்ஸியாக படத்தில் ஆடியுள்ளார்.
விமல் மாதிரி ஹீரோ வெற்றி அடைந்தால் தான் நிறைய புதுமுக இயக்குநர்கள் சினிமாவிற்கு வர முடியும். உதவி இயக்குநர்கள் நல்ல கதையுடன் வர வாய்ப்பு இருக்கிறது. படம் தோல்வி என்பது தயாரிப்பாளருக்கு மட்டும் தோல்வி அல்ல. அனைவருக்குமான தோல்வி. தயாரிப்பாளருக்கு பணம் தான் நஷ்டம். மற்றவர்களுக்கு வாழ்க்கையே நஷ்டம். சினிமாக்காரர்கள் மக்களை குறை சொல்கிறோம். நாம் சரியாக இருக்கிறோமா என்பதை நாம் ஆராய வேண்டும்.
விவசாயிகளின் வலியை கூறிய கடைசி விவசாயி படம் தேசிய விருது பெற்றது. அந்த படத்தை சினிமாக்காரர்கள் யார் கொண்டாடினீர்கள்? ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். ஆனால் யாராவது கடைசி விவசாயிக்கு வாழ்த்து சொன்னீர்களா? முதலமைச்சர் வாழ்த்து சொன்னாரா? நேரில் அழைத்து பாராட்டினாரா இயக்குநரை வாழ்த்த உங்களுக்கு நேரம் இருக்காதா? என கேள்வி எழுப்பினார்.
மக்களை குறை சொல்லாதீர்கள். நான் இயக்குநராக சொல்கிறேன், மணிகண்டனை கொண்டாட தவற விட்டோம். சூரரைப்போற்று படத்துக்கு விருது கொடுக்கவில்லையா என கேள்வி எழுப்புகிறீர்கள். அனைத்து விவகாரங்களிலும் அரசியலை கலந்தால் முன்னேற முடியாது. கடைசி விவசாயி படத்தை இயக்கிய மணிகண்டனுக்கு வாழ்த்துகள். நல்ல கருத்து சொல்கிற எல்லாம் படமுமே மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'மார்கழி திங்கள்' இசை வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய மனோஜ் பாரதிராஜா!