சென்னை: வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி மற்றும் ஷிவானி நடிக்கும் 'பம்பர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. கேரள மாநிலத்தில் வழக்கத்தில் இருக்கும் லாட்டரி சீட் முறையை மையமாகக் கொண்ட உருவாகிவரும் 'பம்பர்' படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் சமீபத்தில் வெளியான 'விருமன்' புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் படத்தின் வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்தார். தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது.
இதில் தங்கதுரை, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை 'நெடுநல்வாடை', 'எம்ஜிஆர் மகன்', 'ஆலம்பனா' மற்றும் 'கடமையை செய்' ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.
இதையும் படிங்க:பேச்சுலர் படத்தின் இசையமைப்பாளர் சித்துகுமாருக்கு திருமணம்