அயன் முகர்ஜியின் உருவாக்கத்தில், சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து ’பிரம்மாஸ்திரா’ எனும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஃபேன்டஸி வகையான திரைப்படம் இன்று (செப்-9) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வாரணாசியின் மலைத் தொடர்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ஒன்றாக பார்க்கப்பட்டது. இன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியானது. இந்நிலையில், பாலிவுட்டில் சமீபத்திய டிரெண்டிங்கான பாய்காட் என்ற பிடியில் இப்படமும் சிக்கியுள்ளது.
இந்தி திரையுலகை சமீப காலமாக பாய்காட் பிரச்சினை ஆட்டிப்படைத்து வருகிறது. அமீர் கான் நடித்து வெளியான லால் சிங் சத்தா, விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் இப்பிரச்சினையில் சிக்கி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. தற்போது இப்படமும் இதில் இருந்து தப்பிக்கவில்லை.
மெகா பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வெளியாகும் முன்பே பாய்காட் பிரம்மாஸ்திரா என்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வந்தது. இன்று படம் வெளியானதும் இது மீண்டும் டிரெண்டிங்கில் வந்துள்ளது. எல்லோருமே படம் மிகப் பெரிய தோல்வி என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் படம் அந்த அளவிற்கு மோசம் இல்லை. விஎப்எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக சிலர் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். பாலிவுட்டில் இந்த பாய்காட் தொல்லையால் முன்னணி நடிகர்களின் படங்களே மிகப் பெரிய தோல்வியடைவது அங்குள்ள திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வெளியானது “சூர்யா 42” படத்தின் மோஷன் போஸ்டர்