ஹைதராபாத்: இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழில் உலகநாயகன் கமலஹாசனும், தெலுங்கில் பிரபல நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் சீசன் 7 தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7ன் பைனல்ஸ் கடந்த ஞாயிற்று கிழமை முடிவடைந்தது. தெலுங்கு பிக் பாஸில் பல்லவி பிரசாந்த் மற்றும் அமர் தீப் என இரண்டு போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பல்லவி பிரசாந்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் முன்பு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின் சக போட்டியாளரான அமர் தீப் அவர் குடும்பத்துடன் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் முன்பு காரில் சென்ற போது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் அமர்தீப்பின் கார் மீது கற்களை எறிந்தும் கம்பியால் கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த சீசனின் சக போட்டியாளராக இருந்த அஸ்வினியின் கார் கண்ணாடிகளையும் பிரசாந்தின் ரசிகர்கள் உடைத்துள்ளனர். மேலும், 5 ஆர்டிசி பஸ்களின் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பிற்காக வந்த ஜூப்ளி ஹில்ஸ் காவல் துறை அதிகாரி மோகன் குமார் காரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரசாந்தின் ரசிகர்கள் அமர்தீப், அஸ்வினி அகியோரின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காவல்துறையின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பேரணியை நடத்தியதே இதற்கு காரணம் என பல்லவி பிரசாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் தெரிவித்தனர்.
பிரசாந்தின் சகோதரர் மனோகர் மற்றும் பிரசாந்தின் நண்பர் வினய் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக போலீஸ் அறிவித்து அவர்களை தேடி வந்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பல்லவி பிரசாந்த் தலைமறைவாகி இருந்து வந்த நிலையில் தற்போது போலீசாரால் பல்லவி பிரசாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த பல்லவி பிரசாந்த்?: விவசாயியின் மகனான பிரசாந்த சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வந்துள்ளார். யூடியூபில் விவசாயம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை போட்டு பிரபலமான இவர் 5 லட்சத்திற்கு மேல் ரசிகர்களை கொண்டுள்ளார். யூடியூபில் பிரபலமாகி மக்களின் மனங்களை கவர்ந்ததால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆகியோருக்கு அர்ஜுனா விருது!