சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 34வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோவை நேற்று (நவ. 4) வெளியிட்டது நிகழ்ச்சி குழு. அதில், யாரும் எதிர்பாராத வகையில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் சிலர் செங்கொடி ஏந்தி, நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசனிடம் போட்டியாளர் பிரதீப்புக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்
இதனால் சமூக வலைதளங்களில், பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என பிரதீப் குறித்த மீம்ஸ் மற்றும் போஸ்ட்கள் வைரலாக தொடங்கின. இதையடுத்து நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்க கூடும் என்ற ஆவல் மக்களிடையே கிளம்ப ஆரம்பித்தது.
வார இறுதி எபிசோட் தொடங்கியதும் மாயா, நிக்ஷன், பூர்ணிமா உள்ளிட்ட பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் கைகளில் செங்கொடியை கட்டி, பிரதீப் சக போட்டியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசுகிறார், டபுள் மீனிங்கில் பேசுகிறார், கதவை திறந்து வைத்து சிறுநீர் கழிக்கிறார், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கமல்ஹாசன் முன் வைத்தனர்
இதற்கு முன்னதாக, கடந்த வாரத்தில் நடைபெற்ற பெல் டாஸ்கில் கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அதில் பிரதீப், கூல் சுரேஷின் தாய் பற்றி அவதூறாக பேசினார் என விமர்சனங்கள் எழுந்தன. பின், ஹவுஸ்மேட்ஸ் சிலர் ஒன்றுகூடி பிரதீப் இப்படி பட்ட செயல்களில் ஈடுபடுவதை பற்றியும், அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கமல்ஹாசனிடம் தெரிவிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த எப்பிசோடில் பிரதீப் தரப்பு விளக்கத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கமல், மணியின் குறிபிட்ட குற்றச்சாட்டுக்குப் பிறகு பிரதீப்பிடம் ‘உங்கள் பதில் வேண்டாம். உட்காருங்கள்’ என்று பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமல் அமரவைத்தார். பின்னர், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா அல்லது நிகழ்ச்சியில் தொடரச் செய்யலாமா என்று ஒவ்வொரு போட்டியாளராக கன்ஃபெஷன் ரூமில் அழைத்து தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார் கமல்.
இதில் தினேஷ், கூல் சுரேஷ், விசித்ரா, அர்ச்சனா தவிர்த்து மற்ற அனைவரும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றனர். பின், பிரதீப்பை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த கமல், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். இதுவரை நடந்து முடிந்த 6 சீசன்களிலில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட முதல் போட்டியாளர் பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப்பின் தனித்துவத்திற்கு, விளையாட்டு யுக்திக்கு எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தன. இவர் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்ற மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு பிரதீப் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதீப் வெளியேற்றத்திற்கு சமூகவலைதளங்களில் பலர் கலவையான விமர்சனங்களை தெளித்து வருகின்றன. இந்நிலையில், போட்டியிலிருந்து வெளியேறிய பிரதீப்புக்கு அவரது நண்பர் கவின், பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் முன் சீசன்களில் போட்டியாளராக இருந்த பலர் சமூக வலைதளத்தில் அதரவு தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: "விஜய் அரசியலுக்கு வரட்டும்... ஆனால்?" - இயக்குநர் வெற்றிமாறன் என்ன சொல்கிறார் ?