சென்னை: 'இயக்குநர் இமயம்' என அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா கடந்த 23ஆம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து அவருக்குத் தேவையான சிகிச்சையை வழங்கிய நிலையில் உடலில் நுரையீரலில் சற்று நீர் தேங்கியுள்ளது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்பட்டு வந்தன.
தொடர்ந்து இரண்டு நாட்களாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சற்றே முன்னேற்றம் அடைந்த நிலையில், தொடர் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கக்கூடிய எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்குப் பிற்பகல் மாற்றப்பட்டார்.
பாரதிராஜவின் குடும்ப நண்பர் டாக்டர் நடேசன், ஏசி சண்முகம், கவிஞர் வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் குடும்பத்தினர் ஆலோசனையின்படி தற்போது எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பாரதிராஜா தியாகராய நகர் மருத்துவமனையில் இருந்து மாற்றப்படும்பொழுது, அவருடனேயே கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு, ஏசி சண்முகம் உட்படப் பலரும் மருத்துவமனை வருகை தந்தனர்.
எம்ஜிஎம் மருத்துவமனையில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்த பரிசோதனைகள் மூத்த மருத்துவர்கள் குழு செய்து வருகிறார்கள். பரிசோதனைக்குப்பின் எந்த மாதிரியான சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும் என மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, ”இயக்குநர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். சிகிச்சை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அச்சப்பட ஆதாரம் இல்லை. வதந்திக்கு வாய்ப்பில்லை. நெஞ்சிலே லேசாக சளி உள்ளது, மருத்துவர் குழு விரைவில் சரி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
நுரையீரலில் சற்றே நீர் சேர்ந்துள்ளது. அதுவும் சரி செய்யப்படும். நன்றாகப் பேசுகிறார், அடையாளம் கண்டுகொள்கிறார். விரைவில் மீண்டு வருவார், திரையுலகை ஆண்டு வருவார்’ எனக் கவிஞர் வைரமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இயக்குனர் பாரதிராஜாவுக்கு மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு