சென்னை: ரத்த சரித்திரம், பயணம், தோனி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த இயக்குநர் தா.செ.ஞானவேல், கடந்த 2017ஆம் ஆண்டு 'கூட்டத்தில் ஒருவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இயக்கி 'ஜெய்பீம்' திரைப்படம் உலக அளவில் இவருக்கு புகழை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்கி வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின், நடிக்கும் நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர் என 3 நடிகைகள் நடிக்க உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இன்று (அக்.03) காலை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் அவரை தொடர்ந்து மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து தற்போது பாலிவுடின் தலைசிறந்த நடிகரான அமிதாப் பச்சன் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினியின் கதாபாத்திரத்திற்கு சமமான ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க, அமிதாப் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதற்காக இயக்குநர் தா.செ.ஞானவேல், மும்பை சென்று முழு கதையும் கூறியதாகவும், கதையைக் கேட்டதும் படத்தில் நடிக்க அமிதாப் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் இணைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், 32 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1991ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஹம்' என்ற படத்தில் ரஜினிகாந்த மற்றும் அமிதாப்பச்சன் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இவர்களின் கூட்டணி அமையவே இல்லை. தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து தமிழ் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் ஈட்டியது. அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கள் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தின் படப்பிடிப்பு நாளை திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இதற்காக இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இப்படம் நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயிலரின் மாஸ் வெற்றி குறித்து ரஜினிகாந்த் பேட்டி!