கோயம்புத்தூர்: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் பாடல்களான ‘காவாலா’ மற்றும் ‘ஹுகும்’ ஆகியவை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதனிடையே, நாளை (ஆகஸ்ட் 10) ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், கோவை மாநகரில் ரஜினிகாந்துக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ‘ஹுகும்’ பாடல் வரிகள் மேலும் சர்ச்சையை கிளப்பியது.
நடிகர் விஜய் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை வைத்து விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களும், ரஜினிதான் என்றுமே சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய பருந்து காக்கா கதையானது விஜய், ரஜினி ரசிகர்களிடை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
இந்த சூழலில் ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டார் என அவருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் கோவையில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதில் ’சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவும் முடியாது, ஜெயிலர் சாதனையை வெல்லவும் முடியாது’ என குறிப்பிட்டு ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘அர்த்தமாயிந்தா ராஜா’ (புரிஞ்சுதா ராஜா) என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
மேலும், அந்த போஸ்டரில் அஜித் மற்றும் ரஜினியின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை லங்கா கார்னர் பகுதியில் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். அதேநேரம், “ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் இமயமலை செல்லும் தான், கரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக செல்லவில்லை” என இன்று இமயமலைக்கு புறப்படுவதற்கு முன்னதாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாதம் 20 நாள்கள் திருட்டு, 10 நாள்கள் சுற்றுலா; நகை திருட்டு கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!