மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம், அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஒட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “டிரைவர் ஜமுனா படத்திற்கு நீங்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளீர்கள், அதற்காக நன்றி. ஓடிடியிலும் படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தி கிரேட் இந்தியன் கிச்சன் படம். இது மலையாள படத்தின் ரீமேக். நான் ரொம்ப சந்தோஷமாக நடித்தேன். இந்த படம் பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அத்துடன் ஆர் ஜே பாலாஜி உடன் ரன் பேபி ரன் படமும் நடித்திருக்கிறேன். அதுவும் பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இரண்டு படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். இந்த படம் ஆணாதிக்கம் குறித்துப் பேசுகிறது” என்றார். பின்னர் இப்போதும் ஆணாதிக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக இருக்கிறது. சிட்டியிலும் நிறைய இடங்களில் இருக்கிறது.
இந்த படம் குறித்து நெருங்கிய நண்பர்களிடம் சொல்லும் போது கூட, என்னையும் இப்படி தான் உங்கள் வீட்டில் நடத்துவீர்களா என்று ஒரு தோழி கேட்டார். அந்த மைன்ட் பிளாக் எல்லாருக்கும் இருக்கிறது. கிராமப்புறங்களில் கூட நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். பெண்களின் வாழ்க்கை கிச்சனில் மட்டும் முடியாமல் திறமையான விஷயங்கள் இன்னும் வெளியே வர வேண்டும்.
இது எல்லோரும் பார்க்க வேண்டிய முக்கியமான படம். அதனால் தான் ரீமேக்காக இருந்தாலும் படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். இப்போது இருக்கும் பெண்களுக்கு நிச்சயம் கொஞ்சம் சுதந்திரம் இருக்கிறது. வருங்கால கணவரும் கிச்சனில் கொஞ்சம் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.
மலையாளத்தில் இந்த படத்தில் சபரிமலையில் பெண்கள் செல்வதை ஆதரித்துள்ளார்கள் என்ற கேள்விக்கு, "கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசம் இல்லை. என்னை பொறுத்தவரை, இவர்கள் தான் கோயிலுக்கு வர வேண்டும், இவர்கள் வரக் கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. இது நாமாக உருவாக்கிய சில சட்டங்கள் தான். எந்த கடவுள் சொல்லியிருக்கிறார் என்று சொல்லுங்களேன்?
சபரிமலை என்று இல்லாமல் எந்த கோயிலிலும், எந்த கடவுளும், எந்த சட்டமும் வைக்கவில்லை. எந்த கடவுளும் தீட்டு நேரத்தில் கோயிலுக்கு வர கூடாது என்று சொல்லவில்லை. இதை க/பெ ரணசிங்கம் படத்திலும் ஒரு வசனமாகப் பேசியிருப்பேன். இது மக்கள் நம்புகின்ற ஒரு விஷயம். எனக்கு எந்தவொரு நம்பிக்கையும் கிடையாது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: LCU வில் இணையும் 'தளபதி 67' சூப்பர் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்!