ஹைதராபாத்: பரினிதி சோப்ரா - ராகவ் சத்தா திருமணம் இன்று பேசுபொருளாக இருந்து வருகிறது. இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உறவினர்களுடன் மிகப்பெரிய கொண்டாட்டங்களுடன் நடத்தப்படுகிறது. ராகவ் சத்தா, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ஆவார்.
திருமணம் நடைபெறவுள்ள உதய்பூருக்கு தம்பதிகள் தங்கள் உறவினர்களுடன் நேற்று வந்தனர். பரினிதி சோப்ராவின் உறவினரான நடிகை ப்ரியங்கா சோப்ரா திருமணத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பரினிதி சோப்ரா, ராகவ் சத்தா திருமண கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இன்று மதியம் 1 மணிக்கு வரவேற்பு விருந்துடன் திருமண கொண்டாட்டம் தொடங்கியது. இன்று மாலை 7 மணி அளவில் 90ஸ் பாடல்களுடன் பார்ட்டி நடத்தப்படுகிறது. திருமண கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் லீலா பேலஸ் மற்றும் தாஜ் லேக் பேலஸ் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. திருமணத்தின் முந்தைய சடங்குகளின் முக்கிய நிகழ்வான சூரா நிகழ்ச்சி பஞ்சாப் மக்களின் திருமணங்களில் முக்கிய நிகழ்வாகும்.
இந்த நிகழ்வு லீலா பேலஸில் உள்ள மகாராஜா அறையில், பரினிதி சோப்ராவின் நெருங்கிய உறவினர்களுடன் நடைபெற்றது. இந்த சூரா நிகழ்ச்சியில் மணப்பெண்ணின் தாய் வழி உறவினர்கள், அவர்களது கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் பெண்ணின் திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென சிவப்பு மற்றும் வெள்ளை நகைகளை பரிசாக வழங்குவர்.
பரினிதி சோப்ரா, ராகவ் சத்தா திருமணத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பிரபலங்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளம் மூலம் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காதல் ஜோடிகளான பரினிதி சோப்ரா, ராகவ் சத்தாவின் திருமணத்தையொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருமண தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வசூல் வேட்டையில் பதானை ஓரங்கட்டிய ஜவான்... ரூ.1000 கோடியை நெருங்க இன்னும் இவ்வளவு தான் பாக்கி!