சென்னை: விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ குடியிருப்பில் வசித்து வந்தவர் பவுலின் ஜெஸிகா என்கிற தீபா. இவர் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும், வாய்தா என்னும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில், நேற்று(செப்.18) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த ஜெஸிகாவின் சகோதரர் தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை வந்த தினேஷ் தனது சகோதரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நடிகை கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதும், அந்த கடிதத்தில் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால், என் காதல் கைக்கூடவில்லை. அதனால், இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் நடிகை ஜெசிக்கா சினிமா உதவி இயக்குனர் சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. அவர்தான் நடிகை தங்கி இருந்த வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டு அவரது அறைக்கு சென்று பார்க்கும்படி கூறியதாகவும், அப்போதே ஜெசிகா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் சிராஜிதீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக சிராஜிதீன் பௌலின் ஜெசிகாவை காதலித்து வந்துள்ளார். விரைவில் ஜெசிகாவை நாயகியாக வைத்து படம் எடுக்க போவதாக ஆசைவார்த்தை கூறி ஜெசிக்காவோடு நெருங்கி பழகி ஏமாற்றியதால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஜெசிகா சம்பவத்தன்று சிராஜிதீனுடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதனிடையே தனது தங்கை பயன்படுத்தி வந்த ஐ-போனை காணவில்லை எனவும், சிராஜிதீனின் நண்பர் அதை எடுத்துச் சென்று விட்டதாகவும் பவுலின் ஜெஸிக்காவின் சகோதரர் குற்றச்சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் முதலமைச்சரின் பேரன் அமர்ந்து உண்ணும் அளவிற்கு தரமானதாக இருக்குமா?: சீமான்