சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, டி.ராஜேந்தர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார், நடிகர் ஆர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மலர்கொத்து, பொன்னாடை செலுத்துவதற்கு ஆகும் செலவை, 3 சிறுமிகளின் கல்விக்காக வழங்குவதாக நடிகர் விஷால் தெரிவித்தார். இவ்விழா மாற்றுத் திறனாளிகளுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் டி.ராஜேந்தர் பேசுகையில், "என்னுடைய ஆற்றல் கடவுள் கொடுத்தது. அன்பால் அழைக்கவா? பண்பால் அழைக்கவா? வா வா என்று அழைக்கவா? என ஜி.வி.பிரகாஷ்குமார், விஷால், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை மேடைக்கு அழைத்தார். இந்த படக்குழுவுக்கு நான் நன்றி கூற வேண்டும்.
விஜய்யின் குஷி படத்தில் ஆரம்பித்து தற்போது வரை என்னை மேடை ஏற்றுபவர் எஸ்.ஜே.சூர்யா. அவருக்காக சிறப்பு நன்றி. படத்தின் வெற்றி என்பது V-யில் தான் இருக்கிறது. இந்த படத்தில் டபுள் V இருக்கிறது. நடிகர் விஷால், தயாரிப்பாளர் வினோத் குமார் என டபுள் V இருக்கிறது. படத்தில் பாட்டுதான் அதிரும் என்று பார்த்தால் படத்தின் சிறப்பு வீடியோவே அதிருகிறது.
எல்லாமே தனி தனி. அதனால் தான் என்னை வர வைத்தது மார்க் ஆண்டனி. செப் 15 தமிழகமே அதிர வேண்டும். இளைய தளபதி நடித்த படம் தெறி. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு இசை மீது வெறி. எந்த திரையாக இருந்தாலும் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கு வேண்டும் உரை.
அவன் இவன் படப்பிடிப்பின் போது தேனிக்கு சென்ற போது விஷாலை சந்திக்க நேரிட்டது. அப்போது அவருக்கு ஷால் எதாவது போடலாமா என்று யோசித்தேன். அவரே ஒரு ஷால், விஷால். அவருக்கு ஷாலா என்று விட்டு விட்டேன். என்னுடைய கரத்தை விஷாலுக்கு கொடுக்க வேண்டும் என்று இங்கு வந்தேன். விஷாலிடம் பணிவும் உண்டு துணிவும் உண்டு கனிவும் உண்டு. தலை குனிவு மட்டும் கிடையாது
சினிமா வாழ வேண்டும். நாங்கள் படமெடுத்தால் மட்டும் போதாது. மக்கள் படையெடுக்க வேண்டும். ஓ.டி.டி.யில் படம் பார்த்து பழகினாலும் திரையரங்கம் சென்று படம் பார்ப்பதை கைவிட்டு விடாதீர்கள். என்றாவது ஒருநாள் இந்த உலகத்தை விட்டு எல்லோரும் போகத்தான் போகிறோம். அதனால் இளைஞர்கள் ஸ்ட்ரெஸ்ஸை தூக்கி போடுங்கள்.
எல்லாமே பணம் சேர்க்கிறார்கள் டன் கணக்கா. இந்த மண்ணை விட்டு போகும்பொழுது எல்லோருக்கும் டண்டனக்கா தான். இருக்கும் வரை சந்தோசமாக இருங்கள். உங்களுக்கு பிடித்த படத்தை பாருங்கள். சந்தோஷமாக இருங்கள். படம் பார்க்க வர முடியவில்லை என்றால் டிவியில் பாருங்கள். ஓடிடியில் பாருங்கள். சந்தோஷமாக இருக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை" என்று டி.ராஜேந்தர் பேசினார்.
சிறப்பு விருந்தினரான நடிகர் ஆர்யா பேசுகையில், "அவர் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது அவருடைய கட்ஸ் தான். விஷால் ஒருமுறை கால் பண்ணி கார்த்திக், சிவா என அனைவரையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டு, நடிகர் சங்கம் பிரச்சினை மற்றும் தயாரிப்பு சங்க பிரச்சினை இருக்கிறது. அதை சரி செய்யவேண்டும் என்று சொன்னான். அனைத்திலும் வெற்றி பெற்று விட்டான்.
இதையும் படிங்க: டி.ராஜேந்தருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்.. இமான் அண்ணாச்சி முடிவுக்கு டி.ஆர். ரியாக்ஷன் என்ன?
கடைசியாக நாட்டில் பிரச்சனை இருக்கிறது என்று அரசியலில் நிற்க முடிவு செய்து விட்டான். இதற்கு நான் வரவில்லை. எஸ்.ஜே சூர்யாவோடு நடிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவர் படத்தின் பட்ஜெட்டில் இருந்து பாதி கேட்பதால் மூன்று முறை தவறிவிட்டது. அடுத்த முறை டிஸ்கவுண்ட் பண்ணி என் படத்தில் நடிக்க வேண்டும்" என்றார்.
நடிகர் விஷால் மேடையில் பேசுகையில், "ஏன் சார் ஆதி கூட படம் பண்றீங்க என்று நிறைய பேர் கால் செய்தார்கள். ஆதி போன் செய்து ஒரு நாள் உங்களால் தான் சாகப் போகிறேன் என்று கூறினார். அபிநயா எங்களுடன் வேலை செய்தது எங்களுக்கு ஒரு மோட்டிவேஷனாக இருந்தது. தயாரிப்பாளர் வினோத் இல்லை என்றால் இந்த படம் இல்லை.
கனல் கண்ணன், 'சண்டக்கோழி' படத்தில் எனக்கு கொடுத்த நல்ல சண்டைகள் மூலம் தான் நான் அறிமுகமானேன். இந்தப் படத்தில் அவர் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். மேலும் வில்லனாக நடிப்பது கடினம், வில்லனாக அதிலும் காமெடி செய்வது மிகவும் கடினம். ஒரு அண்ணனாக வாழ்நாள் முழுவதும் எஸ்.ஜே சூர்யாவை டிஸ்டர்ப் செய்யலாம்.
நான் அரசியிலுக்கு வர வேண்டும் என்று எதையும் பண்ணவில்லை, உங்கள் மூலம் தான் எனக்கு சம்பளம் வருகிறது. அதனால் ஒரு வகையில் நான் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அது தான் இங்கே செய்யும் உதவி. விஜய்யின் தீவிர ரசிகனாக அவருக்கும் நன்றி.
விஜய் அரசியலில் வருவதாக முதலில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அரசியல் என்பது சமூக சேவை. சமூக சேவை இல்லாமல் இது ஒரு துறை, சம்பாதிக்கலாம் அப்படி நினைத்து வந்தால் நஷ்டம் தான். எனது திருமணம் குறித்து நானே விரைவில் அறிவிக்கிறேன்" என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ரஜினி அரசியலுக்கு வராமல் நிம்மதியாக இருக்கட்டும்" - நடிகர் சரவணன்!