சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ராதா ரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித், விஜயகாந்த் குடும்பத்தாருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் இல்லத்திற்கு வருகை தந்த நடிகர் சூரி மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி பேசுகையில், "இந்த உலகமே கேப்டனை பற்றிச் சொல்லியுள்ளது. நான் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. அங்கு கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினோம். சினிமாவில் எப்படி மக்களுக்கு நல்லது செய்து நல்ல மனிதராக வாழ்ந்தாரோ, அதே போல் நிஜத்திலும் வாழ்ந்தவர் கேப்டன்.
வாழ்ந்தால் இவர் போல் வாழ வேண்டும் என்பதைப் பதிவு செய்து விட்டுச் சென்றுள்ளார். என்னத்த சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம். இருக்கிற வரை 4 பேருக்கு நல்லது செய்வோம் என்று விஜயகாந்த் மேடையில் பேசியதைக் குறிப்பிட்ட நடிகர் சூரி மேடையில் சொன்னபடி வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளார்" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "ஆரம்பத்தில் நான் கேப்டனின் 'தவசி' படத்தில் அப்ரண்டிசாக வேலை செய்துள்ளேன். பெயிண்டராக இருந்தேன். ஒரு மகானின் படத்தில் வேலை செய்துள்ளது பெருமையாக உள்ளது. காலம் முழுக்க கேப்டன் மக்கள் மனதில் வாழ்வார்" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த்தின் பெயர் வைப்பது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ஓட்டு மொத்த சினிமா துறையினரும் சேர்ந்து அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்வார்கள் என நம்புகிறேன்" என்று நடிகர் சூரி பதில் அளித்தார்.
இதையும் படிங்க: இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை - நடிகர் விஜய் சேதுபதி