சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”. இப்படத்தை ஸ்டோன் பென்ஞ்ச் நிறுவனம் தயாரித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் நேற்று (நவ 10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்தது. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்தன. இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்நிலையில் நேற்று (நவ.10) படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் எஸ்ஜே சூர்யா பேசுகையில், “படத்தைப் பத்தி நாம் பேசக்கூடாது, படம் தான் பேச வேண்டும் என்று கார்த்தி சுப்புராஜ் சொன்னார். படம் பேசியதை முதல் நாள் முதல் காட்சியில் நாங்கள் கண்ணால் பார்த்தோம். உணர்ச்சிகளுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளனர் மக்கள்.
இந்த தீபாவளி டபுள் டமாகா என்று சொன்னோம், அது நடந்துவிட்டது ரொம்ப சந்தோஷம். பெஸ்ட் படமாக உருவாகியுள்ளது. உலகம் எங்கும் ஒரு தமிழனின் படம் நல்ல பெயர் எடுத்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் பெயர்ப் போடும் போது திரையரங்குகளில் கைதட்டல் கிடைத்தது. விரைவில் படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறோம்.” என்றார்.
பின்னர், ராகவா லாரன்ஸ் பேசும் போது, “ஒன்றரை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. இது கார்த்திக் சுப்புராஜ் படம். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத படம், ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்துள்ளார். பாலச்சந்தருக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் தான் எனது குரு என்று சொல்வேன்” என்றார்.
படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “ மிகவும் சந்தோஷமாக உள்ளது. மக்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்தோம் அது ஒர்க் அவுட் ஆகியுள்ளது. காடுகள், பழங்குடியினருக்கு ஏற்படும் பிரச்சனைகளை எனது பாணியில் சொல்லி உள்ளேன். இது யாரையும் தொடர்புப்படுத்தி எடுக்கப்பட வில்லை” என்றார்.
இதையும் படிங்க: பிரபல நடிகர் கங்கா உடல்நலக் குறைவால் காலமானார்!