திருநெல்வேலி: தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜெயிலர் வெற்றியடைந்த குஷியோடு நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ரஜினியின் 170வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபத்தி போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள தனியார் மண் ஓடு தயாரிக்கும் தொழிற்கூடத்தில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்றே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த நடிகர் ரஜினி, இன்று காலை 10 மணி அளவில் சொகுசு கேரவன் மூலம் படப்பிடிப்பு நடைபெறும் நெல்லை பணகுடி பகுதிக்கு வருகை தந்தார்.
அப்போது சாலையில் கூடியிருந்த ரசிகர்களை கண்டவுடன் ரஜினிகாந்த் காரை நிறுத்த சொல்லி ரசிகர்களை பார்த்து வழக்கம் போல கையசைத்தார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் ’தலைவா தலைவா ஒரே ஒரு போட்டோ’ என்று கோஷமிட்டனர். அப்போது ரஜினி வெள்ளை நிற வேஷ்டி மற்றும் வெள்ளை நிற குர்தா அணிந்து புது கெட்டப்பில் இருந்தார்.
தொடர்ந்து ஓடு தயாரிக்கும் தொழில் கூடத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று, நாளை இரண்டு நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் இதையொட்டி ஷூட்டிங் நடைபெறும் பணகுடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தை தொடர்ந்து தனது 171வது படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது!