சென்னை: நடிகர் கமல் ஹாசன் தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நேரத்தில் அவரது கலைப்பயணத்தின் பக்கங்கள் சிலவற்றை திறந்து பார்க்கலாம். 'கமல்ஹாசன்' என்ற பெயர் கேட்டாலே தமிழ் சினிமாவில் அவர் செய்த சாதனைகள்தான் கண்முன் வரும். சினிமாவை தொழிலாக பார்ப்பவர்கள் மத்தியில் கலையாக பார்த்தவர் கமல்ஹாசன். 60 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா உலகில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார் என்றால், அதன் பின்னால் அவரது உழைப்பும் திறமையும் நிறைந்து இருக்கிறது.
1954ஆம் ஆண்டு பரமக்குடியில் பிறந்த கமல் ஹாசன் 1960ஆம் ஆண்டு 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பால் மணம் மாறாத பிள்ளையாக 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று பாடி நடித்த தனது முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். அதனை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன்பிறகு மலையாளத்தில் கன்னியாகுமரி என்ற படத்தில் நாயகனாக நடித்த இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகன் ஆனார்.
இப்படத்தில்தான் ரஜினிகாந்தும் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினியும் கமலும் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, அவர்கள், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர். நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்தி விட்டு தனித்தனியாக நடிக்க தொடங்கினர். அப்படி கமல் ஹாசன் தனி நாயகனாக உருவெடுக்க பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் போன்றோர் முக்கிய காரணமாக அமைந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சகலகலா வல்லவன் போன்ற படங்களில் நடித்து கமர்ஷியல் ரூட்டில் பயணித்த கமல்ஹாசன், பாலச்சந்தர் படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடித்து வந்தார். பாலு மகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படம் கமலின் நடிப்புக்கு மகுடம் சூட்டியது. எண்பதுகளில் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன. ஆரம்பகாலத்தில் காதல் மன்னனாக வலம்வந்த கமல்ஹாசன் எண்பதுகளில் தனது சினிமா வாழ்வின் பொற்காலத்தில் இருந்தார். ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்தார். ஃபிலிம்பேர் விருதுகள் மட்டும் 18 பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் 'எனக்கு விருது கொடுக்க வேண்டாம் இளைஞர்களுக்கு கொடுங்கள்' என்று ஃபில்ம்பேருக்கு கடிதம் எழுதியது எல்லாம் தனிக்கதை.
அதுமட்டுமின்றி மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்றார். டான்ஸ் மாஸ்டராக இருந்தபோது எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா ஆகியோருக்கு நடனம் சொல்லிக்கொடுத்துள்ளார். தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதிலும் அதனை சினிமாவில் பயன்படுத்துவதிலும் அனைவருக்கும் முன்மாதிரி கமல்ஹாசன்தான். குருதிப் புனல் படத்தில்தான் டால்பி தொழில்நுட்பத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஹேராம், விருமாண்டி படங்கள்தான் முதல் முதலில் தமிழ் சினிமாவில் லைவ் சவுண்டுடன் படமாக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் படத்தில் ஆசியாவிலேயே முதன் முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமிராவை சண்டைக்காட்சிக்கு பயன்படுத்தினார். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் டிஜிட்டல் கேமிராவை அறிமுகப்படுத்தினார். விஸ்வரூபம் படத்தில் ஆரோ 3டியை அறிமுகப்படுத்தினார். தனது பழைய விக்ரம் படத்தில் முதல்முதலில் கம்ப்யூட்டரை திரையில் காட்டினார். இதற்காக புதிய ஆப்பிள் கம்ப்யூட்டரை வாங்கினார்களாம். இதனை பார்த்து ரசிகர்கள் அர்ப்பரித்தனர். மைக்கேல் மதன காம ராஜ் படத்தில் மார்பிங் தொழில்நுட்பத்தை கொண்டுவந்தார். மகாநதி படத்தில் ஆவிட் எடிட்டிங் முறை, குணா படத்தில் ஸ்டெடி கேமிரா, இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா வேடத்திற்கு பிராஸ்தடிக் மேக்கப் எனப்படும் செயற்கை ஒப்பனை என கமல் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள் ஏராளம்.
நடிகராக மட்டுமின்றி ஹேராம், விருமாண்டி படங்களையும் இயக்கினார். பாடல்கள் எழுதினார், பாட்டும் பாடுவார், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் தசாவதாரணியாக வலம் வருபவர் கமல் ஹாசன். தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்ததோடு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான டப்பிங் பேசி வியக்க வைத்தார்.
மைக்கேல் மதன காம ராஜ் படத்தில் நான்கு கமல், அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு என கலைத்துறைக்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ, அதனை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார். முதல் முதலில் உடல்தானம் செய்துகொண்டவரும் கமல்தான். இதுவரை சொல்லியது எல்லாம் குறைவுதான் இன்னும் நிறைய விடுபட்டு இருக்கலாம். பல்கலைக்கழகத்தை பற்றி எழுத பக்கங்கள் போதாதுதானே... கமல்ஹாசன் ஒரு சினிமா பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாது...!
இதையும் படிங்க: ‘நாயகன் மீண்டும் வர்றான்’ - 35 வருடத்திற்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல் ஹாசன்