சென்னை: நடிகை த்ரிஷா, 1983 ஆம் ஆண்டு கிருஷ்ணன் - உமா தம்பதிக்கு மகளாக மே 4-ல் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த த்ரிஷா மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சிறிய சிறிய விளம்பரங்களில் நடிக்கத் துவங்கிய த்ரிஷா, 1999-ல் முதல் முதலாக சேலத்தில் நடந்த ‘மிஸ் சேலம்’ போட்டியில் வெற்றி வாகை சூடினார்.
இவர் நடித்த சோப் விளம்பரம் ஒன்றை பார்த்துவிட்டு அந்த சோப்பை பலர் வாங்கி பயன்படுத்த துவங்கினர். பின்னர் அதே ஆண்டு 'மிஸ் சென்னை' பட்டத்தையும் வென்று அசத்தினார் த்ரிஷா. 1999-ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு 2001-ல் 'மிஸ் இந்தியா' மகுடம் இவரை அலங்கரித்தது.
அதன் பின்னர் இயக்குநர்களின் கவனம் த்ரிஷா மீது விழுந்தது. வரிசையாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. 2002-ல் சூர்யா நடித்த 'மெளனம் பெசியதே' படத்தில் கதாநாயகியாக தனது பயணத்தை தொடங்கினார் த்ரிஷா. அன்று அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நாம் பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் இளவரசியாக வருவோம் என்று. பின்னர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘லேசா லேசா’ படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார்.
அப்படத்தில் உள்ள ‘லேசா லேசா’ பாடல் மற்றும் 'அவள் உலக அழகியே' பாடல்கள் சினிமாவிலும், ரசிகர் மத்தியிலும் மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தது. பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் த்ரிஷா. அதைத் தொடர்ந்து, 2003-ல் விக்ரமுடன் இணைந்து நடித்த சாமி திரைப்படம் சினிமா துறையில் அசைக்க முடியாத இடத்தை த்ரிஷாவுக்கு பெற்றுத்தந்தது.
அதன் பிறகு கடந்த 21 வருடங்களாக விஜய், அஜித், ரஜினி, விகரம் உள்ளிட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடனும் இணைந்து திரையை அலங்கரித்து வருகிறார் த்ரிஷா. இவர் பணியாற்றாத நடிகர்கள் என கூறும் போது விரல்விட்டு எண்ணிவிடலாம். 2010-ல் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. படம் எதிர்பாரத்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும், ஜெஸ்ஸி கதாபாத்திரத்தை போல தனக்கும் காதலி வேண்டும் என இளைஞர்களை தேட வைத்தது.
அதனைத் தொடர்ந்து, 2018-ல் வெளியான ‘96’ திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷா கதைகளை தேர்ந்து தெடுத்து நடிக்கத் துவங்கினார். கதாநாயகியாக இல்ல.. கதை நாயகியாக த்ரிஷா மாறினார். த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராங்கி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து பெண்களும் தானும் இவ்வாறு இருக்க வேண்டும் என ஒருவித புது உணர்வைத் தூண்டியது.
மேலும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்த நடிகை யார் என ஒரு பேட்டியில் கேட்ட போது, தனக்கு ஜெயலலிதா தான் மிகவும் பிடிக்கும் எனவும், அவரது வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் அதில் தனக்கு நடிக்க ஆசை எனவும் கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் கையால் பெற்ற விருதை தனது ட்விட்டர் பக்கத்தில் புரஃபைலாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவிற்கு தமிழ், தெலுங்கு, மளையாலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாக பேசும் திறமையும் உள்ளதால் இவர் அனைத்து சினிமா துறையிலும் சிறந்து விளங்குகிறார்.
கடந்த 21 ஆண்டுகளாக சினிமா துறையில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் தென்னிந்திய அரசியின் 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சினிமா துறை மற்றும் ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.