சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் பங்கு அளப்பரியது. கே.வி.மகாதேவன் முதல் தற்போது உள்ள சான் ரோல்டன் வரை எத்தனையோ இசையமைப்பாளர்கள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர், மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர். ஆனால் எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியவர்கள் வரிசையில் மிகவும் முக்கியமானவர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.
ஜிவி பிரகாஷ் குமார், ஏஆர் ரஹ்மான் இசையில் முதல் முதலாக தனது மழலைக் குரலில் ’சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ என்று பாடியவர். ஏஆர் ரஹ்மான் அக்கா மகனான ஜி.வி.பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் வசந்த பாலன் இயக்கிய ’வெயில்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, யார் இந்த இசையமைப்பாளர் என்று தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது.
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களின் கதைகளை எவ்வளவோ கூறியுள்ளது. ஆனால், முதல் முறையாக வாழ்க்கையில் தோற்றுப் போன ஒருவனின் கதையைச் சொன்னது ’வெயில்’ திரைப்படம். குடும்பத்தினரே திருடன் என வெறுத்து ஒதுக்கும் ஒருவன் பாசத்திற்காக ஏங்கும் கதைக்கு தேவையான இசையை அனைவரையும் கவரும்படி கொடுத்து, படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார்.
அந்த படத்தில் காதல், பால்யம், சோகம், ஏக்கம் என அத்தனை பரிணாமங்களிலும் பாடல்கள் கொடுத்தார். நா.முத்துக்குமார் வரிகளில் ’வெயிலோடு விளையாடி’ என்ற பாடல் இப்போது வரைக்கும் சிறு வயது நினைவுகளை அசைபோடும் ஒவ்வொருவரின் கீதமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. காதலிப்பவர்கள் அத்தனை பேரையும் ’உருகுதே மருகுதே’ என்ற பாடல், ஒரு முறையாவது உருக வைத்திருக்கும். ’காதல் நெருப்பில் நடனம்’ என்ற பாடலில் எல்லோரையும் நனைய வைத்தார். முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷ் குமார் அட்டகாசமான வரவாக பிரகாசித்தார்.
அதன் பிறகு அஜித் நடித்த கிரீடம் படத்தில் ’அக்கம் பக்கம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பின்னர் தனுஷ் , வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன் திரைப்படத்தில் ஜிவி இசையமைத்த பைக் தீம் இசை, இன்று வரை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதே படத்தில், எங்கேயும் எப்போதும் பாடலை ரீமிக்ஸ் வெர்ஷனில் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் ’மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்’ பாடல், படத்தின் காட்சிக்கு ஏற்றவாறு இதமான சூழலை ரசிகர்களுக்கு உணர்த்தும்.
ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த நேரத்தில், யுவன் சங்கர் ராஜா தனது படங்களில் பின்னணி இசையில் கலக்கி வந்தார். அவருக்கு பிறகு எவரும் இல்லை என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் பின்னணி இசை மூலம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
அப்படத்தின் பின்னணி இசை இதுவரை ஜிவி பிரகாஷ் இசையமைத்த படங்களிலேயே உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். மதராசபட்டினம், மயக்கம் என்ன, ஆடுகளம், தெய்வத்திருமகள், ராஜா ராணி, அசுரன், சூரரைப் போற்று என இவர் இசையமைத்த படங்களில் பாடல்களும், பின்னணி இசையும் அனைவரது உணர்ச்சிகளையும் ஆட்டிப் படைத்தது எனலாம். தற்போது தங்கலான், கேப்டன் மில்லர் என மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும், ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படத்தை சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
இசையமைப்பாளராக மட்டுமின்றி, நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். டார்லிங் படத்தின் மூலம் நடிகராகவும் தனது முத்திரையை பதித்தார். தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், அடியே என நடிப்பிலும் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார். இன்றுடன் ஜிவி பிரகாஷ் குமார் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மேலும், அவர் இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துவோம்.
இதையும் படிங்க: பருத்திவீரன் பட விவகாரம்; தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் சரமாரி கேள்வி!