சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பாஜவின் தேர்தல் அறிக்கை வெற்று காகிதத்தில் கருப்பு மையால் எழுதப்பட்ட துணிக்கடை விளம்பரம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘மோடி கையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது’ என்கிறார். மோடி கையில் எடப்பாடிதான் பாதுகாப்பாக உள்ளார். திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு அதிகளவில் உள்ளது.
தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. ஆளுங்கட்சிக்குப் பணிந்துபோகிறது. தேனியில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.1,000 கொடுக்க தொடங்கிவிட்டனர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி வரும் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதில் சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்’ என்றார்.