சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வசித்து வருபவர் படிக்காசு. தொழிலதிபரான இவருக்கு சொந்தமாக அரிசி ஆலைகள், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை, திருமண மண்டபங்கள் என பல இயங்கி வருகின்றன.
இன்று மாலை இவரது வீட்டில் மதுரையில் இருந்து வந்த நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு சொந்தமான காரைக்குடியில் உள்ள தங்கும் விடுதி, புதுவயலில் உள்ள வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, கொத்தரியில் உள்ள பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை போன்ற பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் காரைக்குடி டி.எஸ்.பி. அருண், வட்டாட்சியர் பாலாஜி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வந்துள்ளனர்.