தருமபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இம்மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளைச் சுற்றிலும் ஒன்பது சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, ஆய்வாளர் நிலையிலான காவல் துறை அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் அவர், மக்கள் அமைதியாக பயமின்றி வாக்களிக்க, மூன்று நான்கு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அய்யம்பட்டி வாக்குச்சாவடியில் 100 முதல் 150 பேர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க உள்ளார்கள்.
வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்கினை பதிவு செய்கின்றபோது குறைந்தது ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் இருந்து ஒன்றரை நிமிடங்கள் வரை நேரம் ஆகும், உரிய கால அவகாசத்துக்குள் வாக்குப்பதிவு நிறைவடையும். தாமதம் எதுவும் ஏற்படாது என தெரிவித்தார்.