திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ஆறு மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
இந்த ஆறு மக்களவைத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு சுமூகமாகத் தொடங்கியுள்ளது. இதுதவிர மத்திய மண்டலத்தில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சோதனை வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில இடங்களில் மட்டுமே மின்னணு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டது. இதுவும் உடனடியாக தீர்க்கப்பட்டது. மற்றபடி வாக்காளர்கள் காலை முதல் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இதில் திருச்சி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. அக்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக ஆகியவை இங்கு போட்டியிடுகின்றன. தேமுதிக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் தருமபுரியைச் சேர்ந்தவர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இவர் அறந்தாங்கியைச் சேர்ந்தவர். இவர்களைத் தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆனந்தராஜா உள்பட மொத்தம் 24 பேர் இங்கு போட்டியிடுகின்றனர். 24 பேர் போட்டியிட்டபோதும் இங்கு தேமுதிக, காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
திருச்சி தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 8 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 843 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள்7 லட்சத்து 68 ஆயிரத்து 972 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 148 பேர் உள்ளனர். தொகுதி முழுவதும் 1,662 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 177 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.