தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 18 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. யார் தமிழகத்தை ஆட்சி செய்ய போகிறார்கள் என்பதற்கான தேர்தல் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளரை வெற்றிபெற வைக்க பலவிதமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பெருமாள்பட்டு புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் அமைச்சர் பெஞ்சமினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தாங்கள் வெற்றிபெற்றால் முன்னுரிமை அளித்து செயல்படுத்தக்கூடிய விஷயங்கள் ஏதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி, சென்னீர் குப்பம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தொகுதியின் வளர்ச்சிக்கு தங்களின் திட்டம் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நாசரத்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும், புதுச்சத்திரம் பகுதியிலும் மேம்பாலம் அமைக்க பட உள்ளதாகவும் கூறினார். மேலும் பூந்தமல்லி தொகுதியில் நிச்சயம் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இந்த தேர்தலில் முதன்மையான முழக்கம் என்ன என்பது குறித்த கேள்விக்கு, அம்மாவின் ஆட்சியின் நன்மைகளை சாதனைகளை கூறுவது என அவர் சாதூர்யமாக பதிலளித்தார். கடந்தமுறை தேர்வு செய்யப்பட்டவரால் தொகுதி மேம்பாட்டு நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது அதை நீங்கள் எவ்வாறு செலவழிக்க உள்ளீர்கள் என்ற கேள்விக்கு, இதற்கு முன்னிருந்த சட்டமன்ற உறுப்பினரை பற்றி எனக்கு
தெரியாது, அவர் என்ன செய்தார் என்பதும் தெரியாது. ஆனால் எங்கள் ஆட்சி நடைபெறுவதால் நிச்சயம் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூந்தமல்லி தொகுதிக்கு பூர்த்தியாகும் எனவும் உறுதியளித்தார்.