மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழுக் கட்டங்களாக நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிக்கும் மே 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் பல நாட்களாக இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் தனித்து வேட்பாளரை அறிவித்துள்ளது. டெல்லி தெற்கு தொகுதியில் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "20 ஆண்டுகளாக குத்துச் சண்டை களத்தில் நாட்டை பெருமை படுத்தினேன். தற்போது, மக்களுக்கு சேவை செய்ய நேரம் வந்துள்ளது. இந்த வாய்ப்பையும், பொறுப்பையும் கொடுத்த இந்திய தேசிய காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இவர் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். இவரின் சாதனையைப் போற்றும் விதமாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கி சிறப்பித்தது. 2010ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை விஜேந்தர் சிங் பெற்றார்.