உத்தரப்பிரதேச அரசியலில் எதிரிகட்சிகளாக இருந்த சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களின் பொது எதிரியான பாஜகவை வீழ்த்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்தனர். ஆனால், 24 ஆண்டுகளுக்கு முன்பே கூட்டணி கட்சிகளாக இருந்த சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் எதிரிகளாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை சற்று திரும்பி பார்போம்.
கெஸ்ட் அவுஸ் தாக்குதல்:
1989 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று அப்போதைய சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மற்றும் நவம்பர் 2ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாபர் மசூதியை இடிக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கரசேவர்கள்(தொண்டர்கள்) பலர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் சமாஜ்வாதி கட்சியின் மேல் அதிருப்தியில் உள்ளதால் ஜனதா தளம் சமாஜ்வாதி கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது. 1991ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 402 சட்டப்பேரவை தொகுதிகளை உடைய உத்தரப்பிரதேசத்தில் 34 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்று படுதோல்வி அடைகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வேண்டி நடத்திய ராமஜென்ம பூமி இயக்கத்தால் பாஜக 221 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கிறது. கல்யாண் சிங் முதலமைச்சராக பதவியேற்கிறார். பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பாஜக அமைப்பை சேர்ந்தோரால் இடிக்கப்படுகிறது. பிறகு, தார்மீக பொறுப்பெற்று கல்யாண் சிங் ராஜினாமா செய்கிறார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவையும் கலைக்கப்படுகிறது.
பிறகு, முலாயம் அப்போதைய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கான்சி ராமை சந்தித்து மதவாதத்துக்கு எதிராக ஒன்று சேர அழைப்பு விடுக்கிறார். அதனை ஏற்று, கான்சி ராமின் பகுஜன் சமாஜ் கட்சி முலாயமின் சமாஜ்வாதி கட்சியுடன் 1993 ஆம் ஆண்டு தேர்தலில் ஒன்று சேர்ந்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி 176 தொகுதிகளில் வென்று முலாயம் முதலமைச்சராக இரண்டாவது முறை பொறுப்பெற்கிறார்.
அப்போதைய பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாயாவதிக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1995ஆம் ஆண்டு ஐுன் 1 ஆம் தேதி ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை பகுஜன் சமாஜ் திரும்பபெறுகிறது. ஐுன் 2ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியை உடைக்க சமாஜ்வாதி கட்சியினர் முயற்சி செய்கின்றனர். அதன் விளைவாக, மாயாவதி தங்கி இருந்த அரசு விடுதிக்குச் சென்ற சமாஜவாதி கட்சியினர் அவரை தாக்கினார்கள். இதனை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம்தான் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் எதிரிக்கட்சிகளாக மாற காரணமாக அமைந்த சம்பவமாகும். ஆனால், 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றதால் தங்களின் இருப்பை காப்பாற்றிக் கொள்ள இரு கட்சிகளும் தற்போது இணைந்துள்ளனர்.
24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி-முலாயம் மைன்புரியில் நடக்கும் பொதுகூட்டத்தில் ஒரே மேடையில் பரப்புரை செய்யவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.