கடலூர்: சிதம்பரம் அடுத்த குமராட்சி திமுக ஒன்றிய செயலாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் மாமல்லன். முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட, திமுகவில் பல ஆண்டுகளாக போராடிவருகிறார். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகனும், மாமல்லனும் விருப்ப மனு அளித்திருந்தனர்.
எப்படியும் தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில், சிதம்பரம் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே, குமராட்சி ஒன்றியம் நான்காக பிரிக்கப்பட்டு, அதே ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளராக 4 பேர் நியமிக்கப்பட்டதிலிருந்தே கட்சி மீது வருத்தத்தில் இருந்த மாமல்லன், தற்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், மேலும் விரக்தியடைந்தார்.
திமுக கூட்டணி வேட்பாளரின் பரப்புரைக்குச் செல்லாமல் அமைதி காத்த அவர், யாரும் எதிர்பாராத வகையில், திட்டக்குடிக்கு பரப்புரைக்கு வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அக்கட்சியி்ல் தன்னை இணைத்துக்கொண்டார். தேர்தல் நேரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பாஜகவில் இணைந்தது, சிதம்பரம் தொகுதி கட்சி உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவருக்கு சிதம்பரம் பகுதியில் மக்கள் ஆதரவு வெகுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தீவிர திமுக ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகுவதால் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சிதம்பரம் தொகுதியில் பேச்சு எழுந்திருக்கிறது.