தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு விழாவிற்கு வருகைதந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அரசு மக்களுக்குப் பயனுள்ள பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
இதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறது. அரசுக்குத் துணை நிற்காமல் திமுக தொடர்ந்து சட்டப்பேரவையைப் புறக்கணித்து ஏழை, எளிய மக்களின் திட்டங்களுக்கு எதிர்ப்பைக் காட்டிவருவது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக குக்கிராமம் வரையிலான மக்களுக்கு அதிகத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அதிமுகவோடு தமாகா கூட்டணியில் உள்ள நிலையில் கூட்டணி தொகுதிப்பங்கீடு குறித்து கூட்டணி தலைமை இயக்கமான அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தொகுதிப் பங்கீடு குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைச் சுமுகமாக அமையும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், இந்தக் கூட்டணி வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடியது என்றாலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ள கருத்தை ஏற்பதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க : அரசியல் கட்சிகளின் கொடி மரங்களை அகற்ற உத்தரவு