கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பாத்திமா நகரில் வசித்து வரும் அன்பழகன், பத்திர பதிவு எழுத்தராக பணிபுரிகிறார்.
இவரின் தாயார் இறந்துவிட்டதால் கடலூர் மாவட்டம் விஜய் மாநகரம் கிராமத்திற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததை இரு சக்கர வாகனத்தின் மூலம் நோட்டமிட்ட கொள்ளையர்கள் மதியம் 2.30 மணியளவில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பீரோவில் இருந்த பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை ஒரு பையில் வைத்து வெளியே வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்ததை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு சென்று விசாரித்தபோது கொள்ளையர்கள் என தெரியவந்ததை அடுத்து, அவர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது, கொள்ளையர்கள் பணம், நகை, விலை உயர்ந்த பொருள்களை போட்டுவிட்டு கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பித்துள்ளனர். இதனால் பல லட்சம் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வீட்டை பரிசோதனை செய்து கொள்ளையர்கள் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பத்திர எழுத்தர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும், இருச்சக்கர வாகனத்தின் எண்களை வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பயன்படுத்திய கைபேசி எண்களை வைத்து, அவர்கள் இருப்பிடம் மூலம் காவல் துறையினர் கொள்ளையர்களைத் தேடிவந்தனர். இந்நேரத்தில் விழுப்புரத்தில் இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் சிவகங்கை மாவட்டம் வைரம்பட்டி சங்கரபாண்டி மகன் ராஜ்குமாரும், வேலூர் கிராமம் லட்சுமணன் மகன் காளீஸ்வரன் என்பவரும் பத்திர பதிவு எழுத்தர் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில் அவர்களை கைதுசெய்த காவல் துறையினர், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பிடிபட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.