தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல், இருவரை கைது செய்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லை உள்ள திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு டிஜிபி ஆபாஸ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஜிபி உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டாலின் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் கவரப்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செங்குன்றம் பகுதியில் இருந்து ஆந்திரா நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் 25கிலோ எடை கொண்ட 500 முட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூர் வண்டிக்கார பகுதியை சேர்ந்த சுகுமார்(49) தஞ்சாவூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்த முருகன்(46) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது? யார் இந்த ரேஷன் அரிசியை கடத்தினார்கள் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது