திண்டுக்கல்: நத்தத்திலிருந்து - மதுரைக்கு அரசுபேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை வழக்கம் போல நத்தத்திலிருந்து மதுரை நோக்கி பேருந்து புறப்பட்டது. சசிகுமார் என்னும் ஓட்டுநர் ஓட்டி சென்றார். அப்போது கோவில்பட்டி புளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்றுகொண்டிருந்த போது முன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அருகில் இருந்த ஹோட்டலுக்குள் பேருந்து புகுந்தது.
அப்போது விநாயகர் ஊர்வலம் கண்டுகொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சீரகம்பட்டியை சேர்ந்த பூக்கடை வியாபாரி பாண்டி(50), விநாயகர் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த பால்பண்ணை முன்னாள் ஊழியர் தேவராஜ்(59) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் கோவில்பட்டியை சேர்ந்த கணேஷ் பாபு(49), சுந்தரம்(31), சம்பைப்பட்டியை சேர்ந்த சூரியபிரகாஷ்(28), சாருகேஷ்(17), ராமசாமி(22), ராஜேஷ்(19), புதுக்கோட்டையைச் சேர்ந்த ராசு(45), வத்திபட்டியை சேர்ந்த கதிரேசன்(28), சமுத்திரப்பட்டியை சேர்ந்த கார்த்திக்(22) உள்ளிட்ட 9 பேர் பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்த கூட்டத்தின் மீது பேருந்து மோதிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: காக்கைக்கு நாள்தோறும் வடையும், டீயும் தரும் டீக்கடைக்காரர்