சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் காந்தி நகரில் வசித்துவருகிறார் மூதாட்டி சந்திரா (75). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு நபர்கள், காரை மூதாட்டி வீட்டின் அருகே நிறுத்தினர்.
இதில், ஒருவர் மட்டும் செல்போன் பேசியபடி அவரது வீட்டின் உள்ளே நுழைந்து மூதாட்டி கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க செயினை பறித்து வெளியில் தயாராக நின்றுகொண்டிருந்த காரில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்துச் சென்றார்.
இதில் அதிர்ந்துபோன மூதாட்டி பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அந்தப் பகுதியில் உள்ள முக்கியச் சாலைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, கொள்ளையில் ஈடுபட்டது பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், அஜித்குமார் ஆகியோர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து இந்த இருவரையும் பீர்க்கன்காரணை காவல் துறையினர் கைதுசெய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இளைஞரின் கடைசி நிமிடங்கள் - திக் திக் சிசிடிவி பதிவு!