சென்னை: திருநெல்வேலி செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டில் இருந்து காலியாக எழும்பூர் ரயில் நிலையம் சென்றது.
அப்போது, சைதாப்பேட்டையை ரயில் கடக்கும் வேளையில், அதனை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த இரண்டு இளைஞர்கள் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.
இது குறித்து மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் அடிபட்டு இறந்தது, சைதாப்பேட்டை திடீர் நகரைச் சேர்ந்த கௌதமன்(19), அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (17) ஆகிய இருவர் என தெரியவந்தது.
இதில் கௌதமன் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார் என்பதும் உதய குமார் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. உடற்கூராய்வுக்காக இருவரது உடலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.