சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு கடந்த 24ஆம் தேதி போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மண்டல இயக்குநர் அமித் கவாட்டே தலைமையிலான போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கிண்டியில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் கிரிக்கெட் கிளவுஸ்கள் இருந்துள்ளது.
அவற்றினுள் எதையோ மறைத்து வைத்துள்ளதாக சந்தேகமடைந்த அலுவலர்கள் அதனை சோதனை மேற்கொண்டபோது கிளவுஸ்களுக்குள் 0.990 கிலோ கிராம் அளவிலான போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த பார்சல் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாண்ட் பகுதிக்கு அனுப்பவிருந்ததும் தெரியவந்தது.
அதனைப் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அது எந்த வகையிலான போதைப் பொருள் என ஆய்வு மேற்கொண்டதில், பறிமுதல் செய்யப்பட்டது அஃபிடமைன் என்ற அதிவீரியம் கொண்ட போதைப் பொருள் என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இன்று(ஏப்.29) கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய அஸ்வின் , சுரேந்திரன் ஆகிய இருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இந்த கடத்தல் விவகாரங்களில் பின்னணியில் உள்ள போதைப்பொருள் மாஃபியா தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அதி வீரியமிக்க அஃபிடமைன் என்ற இந்த போதைப் பொருளை இக்காலத்து இளைஞர்கள் போதைக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வருவதாகவும், இந்த அஃபிடமைன் போதைப் பொருளை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அதன்மூலம் மாரடைப்பு, ஞாபகமறதி, மன பிரம்மை போன்ற பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.