சென்னை அண்ணாசாலையில் 63 மூன் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் தனியார் நிதி சேவை வழங்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பிரபலமான கட்டுமானத்துறையில் ஈடுபட்டு வரும் மும்பையை சேர்ந்த ஐ.எல் & எஃப் எஸ் போக்குவரத்து நெட்வொர்க்குகள் இந்தியா லிமிடட் (ஐ.டி.என்.எல்) என்ற நிறுவனத்திடமிருந்து சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்கியுள்ளது.
இதற்கு ஆண்டொன்றுக்கு 9 விழுக்காடு வட்டி அளிக்கப்படும் என்ற உறுதியுடன் இந்த கடன் பத்திரங்களை வாங்கி உள்ளனர். ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வட்டி தொகை தருவதாக கூறி, தராமலேயே இழுத்தடித்தாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணையில், ஐ.எல் & எஃப்எஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உறரி சங்கர், முன்னாள் நிர்வாக இயக்குனர் ராம்சந்த் கருணாகரன் ஆகிய இருவரும் அமலாக்கத் துறையின் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பையில் இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து, சென்னையிலுள்ள வழக்கில் கைது காண்பித்து சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போலி கணக்கு காட்டி ரூ.21 கோடி வரிப்பலன் பெற்ற இருவர் கைது!