திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் பணக்குடி பைபாஸ் மின் அலுவலக பகுதியை சேர்ந்தவர் துரை. கடந்த 2020 பிப்ரவரி மாதம், இவரது வீட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து பணகுடி காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இன்று(பிப்.25) வள்ளியூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த லெப்பை குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொண்ணு என்பவரது மகன் சேகர் (36), மற்றும் மூன்றடைப்பு தாழைக்குளம் பகுதியை சேர்ந்த நம்பி என்பவரது மகன் ரவி (35), ஆகியோரை விசாரணை செய்தபோது இருவரும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை செய்தபோது, பணகுடி பகுதியில் துரையின் வீட்டை உடைத்து 35 பவுன் நகைகளை திருடியதும் இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பணகுடி காவல் ஆய்வாளர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 55 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சாத்தூர் வெடிவிபத்து - உயிரிழப்பு 23ஆக உயர்வு