திருநெல்வேலி: சிறையில் வைத்து கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்றுவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க சென்றபோது, அங்கிருந்த பிற கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏப்.22 மாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாதி மோதல்கள் காரணமாகவே முத்து மனோ சிறையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில் முத்து மனோ கொலை செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று (ஏப்.23) அவரது உறவினர்கள், குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சுழலில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 8 மணிநேரமாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
உடற்கூராய்வின் போது அவரது உறவினர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், சாதிக் கொலை வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. அதனை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தோம்.
இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நீதிபதி விசாரணை நடப்பதால் அந்த விசாரணை முடிந்த பின்பு சிறைத்துறை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் போராட்டத்தை கைவிட்டுள்ளோம் என்றனர்.
இதனிடையே முத்து மனோ கொலை தொடர்பாக 6 காவல் துறையினர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறையின் துணை ஜெயிலர் உள்பட 6 காவல் துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.