திண்டுக்கல்: தொடர் திருட்டு சம்பவங்களில் கொள்ளை போன 16 பவுன் நகையயும், அதனை திருடிச்சென்ற கொள்ளையர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வத்தலகுண்டு பேரூராட்சிக்குள்பட்ட ஆடுசாபட்டி செல்லும் சாலையிலுள்ள சோமசுந்தரம் என்பவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், இன்று (மே.24) அதிகாலை வீட்டின் உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து, வீட்டில் இருந்த 14 பவுன் நகை, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்களை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அதோடு நில்லாமல், பக்கத்து வீடான துரைப்பாண்டியன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வேளையில், உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அவரது மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்துள்ளனர். அப்போது, துரைபாண்டியனின் மனைவி அலறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பறித்த இரண்டு பவுன் தாலியை மட்டும் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வத்தலக்குண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து,, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் குமாரன் தலைமையிலான காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களை அழைத்து தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.