திருப்பத்தூர் அருகே வெங்கலாபுரம் கிராமம் காமராஜர் நகரைச் சேர்ந்த தேவராஜ் மகன் சதீஷ்குமார் (37).
இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், உள்ளிட்டப் பகுதிகளில் ஒரு மினி ஸ்கேன் மிஷின் கொண்டு கர்ப்பிணி பெண்களை ஏமாற்றி கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
கடந்த மே 28ஆம் தேதி தர்மபுரி நகர போலீசார் சதீஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது பாலினத் தடைச் சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் முக்கியக்குற்றவாளியான சதீஷ்குமார் தொடர்ந்து இதுபோன்று குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதால் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பரிந்துரையின் பேரில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, சதீஷ் குமாரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி சேலம் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் சதீஷ்குமாருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.
இதையும் படிங்க:கருவில் இருக்கும் குழந்தையைத் தத்தெடுக்கக்கூடாது - பஞ்சாப், ஹரியானா நீதிமன்றங்கள் அறிவிப்பு!