மயிலாப்பூர் வி.எம்.தெருவை சேர்ந்த ரோஷன் குமார் நடத்தி வரும் வெள்ளிப் பொருட்கள் விற்கும் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் சிங்(20) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி ரோஷன் குமார் தான் வழக்கமாக சவுகார்பேட்டையில் வெள்ளி வாங்கும் கடைக்கு, 30 கிலோ வெள்ளிக்கட்டிகளை வாங்கி வரும்படி சித்தார்த் சிங்கை அனுப்பியுள்ளார்.
ஆனால், 30 கிலோ வெள்ளிக்கட்டிகளுடன் சித்தார்த் சிங் மாயமானது பின்னர்தான் தெரியவந்தது. இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ரோஷன் குமார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
குறிப்பாக, சித்தார்த் சிங்கின் செல்ஃபோன் எண்ணை டிராக் செய்ததில், அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் இருப்பதாக காண்பித்தது. இதனையடுத்து தனிப்படையினர் விரைந்து சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த சித்தார்த் சிங்கை (20) கைது செய்தனர். அவரிடமிருந்து 13 கிலோ வெள்ளிக்கட்டிகளை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து விபத்து!