சென்னை: ராமாபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனின் பெற்றோர், ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில் ராமாபுரத்தில் இயங்கி வரக்கூடிய ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில், தனது 15 வயது மகன், 12 வயது மகள் ஆகியோர் படித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, 11ஆம் வகுப்பு படித்து வரக்கூடிய தனது மகன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, படிக்கட்டில் கீழே விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டு, பின்னர் இரு மாத சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு சென்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனமுடைந்த மாணவன்
கால் முறிவு ஏற்பட்டதால், தனது மகன் பள்ளி படிக்கட்டில் ஏறி சிரமப்படுவதைக் கண்ட அப்பள்ளியின் வேதியியல் ஆசிரியர் சீதா சந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் மாணவர்கள் முன்னிலையில் கேலி, கிண்டல் செய்வதாகக்கூறி, தனது மகன் தன்னிடம் அழுது வருத்தப்பட்டதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சமாதானம் செய்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பியதாகவும், கடந்த மார்ச் 7ஆம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த தனது மகன், சிறிது நேரத்தில் அழுதுகொண்டே கையில் பேப்பருடன் வந்து தன்னிடம் கொடுத்துவிட்டு, இன்று படிக்கட்டில் ஏறி பள்ளிக்குச் செல்ல 10 நிமிடங்கள் தாமதமானதால், ஆசிரியர்கள் சுரேஷ், சீதா சந்திரன், டீன் ஆகியோர், 'எங்கே சென்றாய், எப்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தாய்' என தகாத வார்த்தையால் தன்னை கேவலப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மாத்திரை உட்கொண்ட மாணவன்
இதனால், தற்கொலை செய்துகொள்ள அளவுக்கதிகமான மாத்திரை உட்கொண்டதாகவும், தனது மரணத்திற்குக் காரணம் பள்ளி ஆசிரியர்கள் எனக் கூறியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். உடனே, தனது மகனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும், இரு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராயலா நகர் காவல் துறையினர், ஆசிரியர்களான சீதா சந்திரன், சுரேஷ் ஆகியோர் மீது தற்கொலை செய்துகொள்ளத்தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செயதுள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.